தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 17.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 17.10.2016 

thirunavukkarasar_11641e

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இக்கட்டணம் குறித்து போக்குவரத்து ஆணையர் முன்னிலையில் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தி, கட்டணம் நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி சென்னையிலிருந்து சொகுசு பேருந்தில் மதுரை செல்வதற்கு ரூ.880, திருச்சிக்கு ரூ.650, கோவைக்கு ரூ.900, திருநெல்வேலிக்கு ரூ.1,000 மற்றும் ஏ.சி. பேருந்தாக இருந்தால் கூடுதலாக ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை செல்வதற்கு ரூ.357 தான் வசூலிக்கிறது. இந்நிலையில் இக்கட்டண உயர்வு குறித்து அரசு சார்பாக அறிவிக்காமல் ஆப்பரேட்டர்கள் சங்கத்தின் மூலமாக அறிவிக்கப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.  ஆம்னி பேருந்துகள் இயக்குவதற்கும், கட்டண உயர்வு செய்வதற்கும் ஏதாவது ஒரு அடிப்படை இருக்க வேண்டும். சில வரைமுறைகளுக்குட்பட்டு இப்பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இல்லையென்றுச் சொன்னால் பண்டிகைக் காலங்களில் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.
அதேபோல, பண்டிகைக் காலங்களில் ரயில்வே சார்பில் முக்கிய நகரங்களில் இருந்து ‘சுவிதா” என்ற பெயரில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள் மட்டும் வழக்கமான கட்டணத்தில் வழங்கப்படும். அதன் பிறகு பிரிமியம் டிக்கெட் என்ற பெயரில் ஒவ்வொரு டிக்கெட்டும் வழக்கமான கட்டணத்தை விட கூடுதலாக விற்கப்படுகிறது. எப்படியாவது ஊருக்கு செல்ல வேண்டும் என்று கருதுபவர்கள் கூடுதல் கட்டணத்திற்கு டிக்கெட் வாங்கி ரயில்களில் பயணிக்கிற கொடுமை நடந்து வருகிறது. இதை உடனடியாக கவனத்தில் கொண்டு மத்திய ரயில்வே துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பயணிகள் அவசரத்தை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளும், ரயில்வே நிர்வாகமும் பணம் ஈட்டி தங்களது வருவாயை பெருக்கிக் கொள்வதை எவ்வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மக்களின் பயன்பாட்டிற்குத் தான் பேருந்துகளும், ரயில்களும் இருக்கின்றனவே தவிர, வருமானத்தை பெருக்குவதற்காக அல்ல. எனவே, மக்களை பாதிக்கிற வகையில் உயர்த்தப்பட்டுள்ள ஆம்னி பேருந்து கட்டணத்தை உடனடியாக கைவிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைந்த பிறகு பலமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகிறது. அதேநேரத்தில் கலால் வரியை உயர்த்தி மத்திய அரசு தனது வருமானத்தை பெருக்கிக் கொண்டு வருகிறது. இதன்மூலம் பெட்ரோல், டீசல் விலை உயர்வதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து சாதாரண ஏழைஎளிய மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள்.
எனவே, மத்திய பா.ஜ.க. அரசின் இத்தகைய மக்கள் விரோத நடவடிக்கையை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *