தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை

ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் மக்களை திரட்டுவதற்காக ஜவஹர்லால் நேரு அவர்கள் 1938 இல் ‘நேஷனல் ஹெரால்ட்” என்கிற ஆங்கில நாளேட்டோடு இந்தியிலும், உருதுவிலும் பத்திரிகைகளை வெளியிட்டார். அன்றைய பத்திரிகைகள் பிரிட்டீஷ் ஆட்சியாளர்களின் ஊதுகுழலாக இருந்ததால் காங்கிரஸ் கட்சியின் குரலாக ஒலிக்க இந்த பத்திரிகைகளை தொடங்க வேண்டிய அவசியம் ஜவஹர்லால் நேருவுக்கு ஏற்பட்டது. இந்த பத்திரிகையை நிர்வாகம் செய்வதற்காக அசோசியேடட் ஜெர்னல்ஸ் லிமிடெட் என்கிற நிறுவனம் உருவாக்கப்பட்;டது. அதற்குப்பிறகு 2008 இல் பொருளாதார சிக்கல் காரணமாக இப்பத்திரிகைகள் நிறுத்தப்பட்டது. இதற்குப் பிறகு அதில் பணியாற்றிய நூற்றுக்கணக்கானவர்களுக்கு சம்பளம், வருங்கால வைப்பு நிதி, பணியாளர் மருத்துவ காப்பீடு, சொத்து வரி போன்றவற்றிற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை பன்மடங்காக கூடி வந்தது.

இந்திய தேசிய விடுதலை வரலாற்றோடு பின்னிப் பிணைந்து செயல்பட்டு வந்த நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை சந்தித்த பல்வேறு பொருளாதார சிக்கல்களை போக்குகிற வகையில் 2010 இல் அசோசியேடட் ஜெர்னல்ஸ் நிறுவனத்திற்கு பல தவணைகளில் காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி கடனாக கொடுத்திருந்தது. இதற்குப் பிறகும் அந்த நிறுவனம் பல்வேறு சிக்கல்களை சந்தித்ததால் அதை மறுசீரமைத்து வலிமைப்படுத்தி செயல்படுகிற நிறுவனமாக மாற்ற 2012 இல் ‘யங் இந்தியன்” என்கிற புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டது. இந்த இரண்டு நிறுவனங்களுமே இந்திய கம்பெனிகள் சட்டத்தின் 25 ஆவது பிரிவின்படி துவக்கப்பட்ட லாப நோக்கில்லாத நிறுவனங்களாகும். இந்த நடவடிக்கைகள் மூலமாக அசோசியேடட் ஜெர்னல் லிமிடெட் நிறுவனத்தின் சொத்துக்கள் அனைத்தும் அதனிடமே உள்ளதே தவிர, யங் இந்தியா நிறுவனத்திற்கோ அல்லது அதன் இயக்குநர்களுக்கோ, பங்குதாரர்களுக்கோ ஒரு பைசா கூட சென்றடையவில்லை. பழைய நிறுவனத்தில் இயக்குநர்களாக இருந்தவர்களே புதிய நிறுவனத்திலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பின்னணியில் காங்கிரஸ் கட்சி நேஷனல் ஹெரால்ட் பத்திரிகை நிறுவனத்திற்கு கடன் கொடுத்ததை கிரிமினல் குற்றமாக கருத வேண்டுமென சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்திருக்கிறார். இந்த பரிமாற்றத்தால் பங்குதாரர்கள் எவருக்கும் பங்கு ஆதாயமோ, லாபமோ ஒரு பைசா கூட இல்லாத போது குற்றச் செயல் எங்கே இருக்கிறது ? மோசடி செய்யப்பட்டதாக பங்குதாரர்கள் புகார் கூறாத போது மோசடி எங்கே இருக்கிறது ? இச்சொத்துக்கள் அனைத்தும் குத்தகையின் அடிப்படையில் இருக்கிற போது இதை விற்று ஆதாயம் அடைய வாய்ப்பே இல்லாத நிலையில் குற்றச் செயலுக்கு எங்கே வாய்ப்பு இருக்கிறது ? ஒரு அரசியல் கட்சி எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை தடுப்பதற்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ அல்லது வேறு சட்டங்களிலோ வாய்ப்புகள் இல்லாத போது சுப்பிரமணிய சுவாமிக்கு இவ்வழக்கை தொடுக்க என்ன சட்ட உரிமை இருக்கிறது ?

2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தில் இதே சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடுத்த போது ஒரு அரசியல் கட்சி எப்படி செலவு செய்ய வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்ய முடியாது என்று தெளிவாக தீர்ப்பு கூறியதை எவரும் மறந்திட முடியாது. இச்சூழலில் சுப்பிரமணிய சுவாமியை தூண்டிவிட்டு காங்கிரஸ் கட்சியை முடக்கி விடலாம் என மிகப்பெரிய சதித் திட்டத்தை பா.ஜ.க. தீட்டியிருக்கிறது. இதை நிறைவேற்றுவதற்கு மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏற்கனவே நிதியமைச்சகத்தின் அமலாக்கத்துறை இயக்குநர் ராஜன் எஸ். கடோச் செப்டம்பர் மாதம் 2015 இல் சுப்பிரமணிய சுவாமியின் புகாரை விரிவாக விசாரித்து வழக்கு தொடர எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முடிவு செய்தார். இதுகுறித்து சுப்பிரமணிய சுவாமி பிரதமரிடம் புகார் கூறியதன் பேரில் அந்த இயக்குநர் இடமாற்றம் செய்யப்பட்டு, பிரதமர் மோடிக்கு நெருக்கமான குஜராத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டார். பிறகு பழைய புகாரின் அடிப்படையில் பொய் வழக்கு தொடர முயற்சி செய்யப்படுகிறது. இதைவிட பழிவாங்கும் நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது. இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகள் பிரதமரின் அலுவலகத்திலிருந்தே முடுக்கி விடப்படுவதாக இளந்தலைவர் ராகுல்காந்தி கூறியிருப்பதை எவரும் மறுக்க முடியாது.

காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக சந்திக்க துணிவற்ற பா.ஜ. கட்சி சுப்பிரமணிய சுவாமியை ஏவிவிட்டு பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை மக்கள் மன்றத்தின் மூலமாகவும், சட்டத்தின் மூலமாகவும் சந்திப்பதற்கு தயார் என்று அன்னை சோனியா காந்தி அறிவித்திருக்கிறார். கடந்தகாலத்தில் ஜனதா ஆட்சிக்காலத்தில் எத்தகைய அடக்குமுறைகளை இந்திரா காந்தி சந்தித்தாரோ, அதைப் போல அவரது வீரமிக்க மருமகள் தியாகத்தின் திருவிளக்கு அன்னை சோனியா காந்தி நிச்சயம் சந்தித்து வெற்றிவாகை சூடுவார் என்பது உறுதியாகும்.

மத்திய பா.ஜ.க. அரசு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்படுத்தி வரும் பழிவாங்கும் போக்கை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்துகிற வகையில் வருகிற 19.12.2015 சனிக்கிழமை அன்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் நடத்த வேண்டுமென அன்போடு வேண்டுகிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *