தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 19.1.2016 

23JANSSY02-sho_24_2288049gஐதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்த ரோகித் வெமுலா என்ற தலித் மாணவர் பல்கலைக் கழக வளாகத்திலேயே தற்கொலை செய்து கொண்டது நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் பாரதிய ஜனதா கட்சியின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி. அமைப்பு மாணவர்களுக்கும், ரோகித் வெமுலா சார்ந்திருந்த அமைப்பு மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மத்திய பா.ஜ.க. அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மூலமாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி எடுத்த நடவடிக்கை காரணமாக பல்கலைக்கழக துணை வேந்தர் அப்பாராவ் மேற்குறிப்பிட்ட மாணவர்களை பல்கலைக் கழகத்திலிருந்தும், விடுதியிலிருந்தும் பலவந்தமாக வெளியேற்றினார். இந்த கொடுமையின் காரணமாக ரோகித் வெமுலா விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக ஏ.பி.வி.பி. மாணவர்கள் காட்டிய ஜாதிய அடக்குமுறையினால் தலித் மாணவர் தன்னை மாய்த்துக் கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டிருக்கிறது.

மாணவர்களின் புகாரின் அடிப்படையில் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா, துணை வேந்தர் அப்பாராவ் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தாலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்குமா என்கிற கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே, உடனடியாக சம்மந்தப்பட்ட மத்திய அமைச்சரும், துணை வேந்தரும் பதவியிலிருந்து விலக்கப்பட்டு மத்திய புலனாய்வுத்துறை தலித் மாணவரின் தற்கொலை குறித்து விசாரிக்க வேண்டும். மேலும் மத்திய பா.ஜ.க. ஆட்சியில் பச்சிளம் தலித் குழந்தைகள் உயிரோடு எரிக்கப்பட்ட கொடுமையும் நிகழ்ந்திருப்பதை யாரும் மறக்க முடியாது. இத்தகைய கொடுமைகளை எதிர்த்து தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி.துறை தலைவர் திரு. கு. செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை நுங்கம்பாக்கம், சாஸ்திரி பவன் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றிருக்கிறது.

நேற்று மதுரையில் நடைபெற்ற வழக்கறிஞர்கள் கூட்டத்தில் உரையாற்றிய முற்போக்கு சிந்தனையும், செயல்பாடும் கொண்ட நீதியரசர்கள் பி.ஆர். சிவக்குமார், டி. அரிபரந்தாமன் ஆகியோர் நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் நிகழ்ந்து வருகிற அநீதி குறித்து மனம் வெதும்பி துணிச்சலாக பேசியுள்ளனர். உயர்நீதிமன்றங்களில் மொத்தம் உள்ள 1200 இடங்களில் 18 பேர்தான் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த நீதிபதிகள் இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சி தகவலையும் வெளியிட்டுள்ளனர். நீதிமன்றங்கள் என்பது மேல்ஜாதி ஆதிக்கத்திற்கு அடித்தளமாக, பாதுகாவலனாக அமைந்திருப்பது மிகப் பெரிய சமூக அநீதியாகும்.

அதேபோல மயிலாடுதுறை அருகிலுள்ள திருநாள்கொண்டசேரி கிராமத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்நத 85 வயது நிரம்பிய குஞ்சம்மாள் பிணத்தை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல ஆதிக்க ஜாதியினர் மறுத்ததும், காவல்துறையினர் அனுமதியை பெற்றுத் தராமல் அவர்களே முன்னின்று, தனிப்பாதையில் பலவந்தமாக எடுத்துச் சென்று இறுதிச் சடங்குகள் நிகழ்த்தப்பட்ட கொடுமை நடைபெற்றிருக்கிறது. சமூகநீதிக்காக போராடிய தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோர் பிறந்த மண்ணில் இந்த கொடுமையைக் கண்டு ரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய அவலங்களில் இருந்து தலித் மக்களை காப்பாற்றுவதைவிட வேறு என்ன பணி முக்கியத்துவம் பெற்றதாக இருக்க முடியும் ? இக்கொடுமைகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

எனவே, சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளாகியும் நீதிமன்றங்களில் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு பின்பற்றப்படாமல் சமூகநீதிக்கு எதிரான கொடுமைகளும், தலித் மக்களுக்கு எதிரான சட்டவிரோத அடக்குமுறைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவது சகித்துக் கொள்ளவே முடியாத ஒன்றாகும். மத்தியில் நரேந்திர மோடி ஆட்சியும், மாநிலத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியும் தலித் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் தலித் மக்களிடையே பாதுகாப்பற்ற பதற்றமான நிலை நீடித்து வருகிறது. இத்தகைய அவலநிலையை போக்குவதற்கு சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே இன்றைய அவசியமாகும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *