தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மத்திய அமைச்சரவையில் மீனவர் நலத்துறை என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என ராமேஸ்வரத்தில் கடல்தாமரை மாநாட்டை பா.ஜ.க.வினர் நடத்தியபோது இன்றைய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வாக்குறுதியளித்தார். ஆனால், ஆட்சிக்கு வந்து 18 மாதங்கள் ஆகியும் தனி அமைச்சகமும் உருவாக்கப்படாத நிலையில் மீனவர் பிரச்சனை மேலும் மேலும் மோசமான நிலைக்கு சென்றுகொண்டிருக்கிறது. சில காலத்திற்கு முன் ‘ சர்வதேச கடல் எல்லையை தாண்டி எங்கள் கடல் பகுதிக்குள் வந்தால் மீனவர்களை சுடுவோம். அப்படி சுடுவதில் எந்த மனித உரிமை மீறலும் இல்லை. இதற்கு சட்டத்தில் முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளது ‘ என்று தனியார் தமிழ் தொலைகாட்சிக்கு இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கொக்கரித்த போது, வாய் மூடி மௌனியாக இருந்தவர்கள்தான் பா.ஜ.க. ஆட்சியாளர்கள். இது குறித்து மோடியோ சுஷ்மாசுவராஜோ கடுமையான எதிர்ப்புகளை தெரிவிக்காத காரணத்தினால் மீனவர்களின் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக 41 தமிழ் மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதே போல, அவர்களது 56 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டு இலங்கை அரசிடம் உள்ளன. இதை விடுவிக்க முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதி தன்னுடைய நீலிக்கண்ணீரை வடித்து நாடகமாடிவருகிறார். மத்திய அரசோ கண்டும் காணாமல் இருந்து வருகிறது. பிரச்சனையை திசை திருப்புவதற்காக கச்சத்தீவு பிரச்சனை குறித்து ஜெயலலிதா தமது கடிதத்தின் மூலமாக எழுப்பிவருகிறார். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கும் கட்சத்தீவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை தமிழக மீனவர்கள் நன்கறிவார்கள்.

தமிழக மீனவர்கள் பிரச்சனையை தீர்க்க கையாலாகாதவர்கள் ஆழ்கடல் மீன் பிடிப்பு என்று மீனவர்களிடம் ஆசைவார்த்தைகளை மத்திய மாநில அரசுகள் கூறிவருகின்றன. மேலும் இந்திய இலங்கை போக்குவரத்ததை உருவாக்க ரூபாய் 24 ஆயிரம் கோடி செலவில் இராமேஸ்வரம்-இலங்கை இடையே கடல்பாலம் அமைக்கப்போவதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. சமூகத்தின் அடித்தளத்தில் உள்ள மீனவர்களின் பிரச்சனையை தீர்க்க முடியாத நரேந்திரமோடி அரசு இணைப்புப்பாலம் அமைப்போம் எனறு கூறுவது ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போகப் போவதாக’ கூறுவதைப் போல இருக்கிறது.

தமிழகத்தில் வடகிழக்கு, தென்மேற்கு பருவ மழைகள் காரணமாக தங்களுடைய தொழிலை நிரந்தரமாக செய்ய முடியாத நிலையில் தமிழக மீனவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தங்கள் தொழிலை தொடர முடியாத காலங்களில் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்களுடைய வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். நிவாரணம் என்பது மீனவர்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டுமே தவிர அவர்களை புறக்கணித்துவிட்டு நிவாரணம் வழங்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *