தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 21.12.2015

275_JWYpvVs1-520x245

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சென்னை, கடலூர், காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு பல்வேறு துன்பங்களுக்கு மக்கள் ஆளாகி வருகிறார்கள். அதைப்போல தென்மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் போன்ற மாவட்டங்களிலும் இயல்புக்கு மாறாக கடும் மழை பெய்த காரணத்தால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வரலாறு காணாத பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

தென்மாவட்டங்களில் விவசாயம், உப்புத் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் விவசாயிகளுடைய நிலம் திரும்பவும் விவசாயம் செய்ய முடியாத அளவுக்கு மணல் திட்டுகள் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மணல் திட்டுகள் அகற்றப்பட்டு சமப்படுத்தப்பட்டு, மண் வளம் பரிசோதிக்கப்பட்ட பின்புதான் திரும்பவும் விவசாயம் செய்ய முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

அதைப்போல ஆயிரக்கணக்கான ஏக்கரில் செய்யப்பட்டு வந்த உப்புத் தொழில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு, திரும்ப அத்தொழிலை உடனடியாக செய்வதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தினால் உப்பளங்கள் அடித்துச் செல்லப்பட்ட காரணத்தால் அதை சமன் செய்து சீரமைப்பதற்கு மிகப்பெரிய முதலீடு தேவைப்படுகிற காரணத்தால் என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் விழி பிதுங்கியிருக்கிறார்கள். திரும்பவும் உப்பளத் தொழில் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 2 மாதங்கள் ஆகும் என்பதால் அதில் பணியாற்றிய உப்பளத் தொழிலாளர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, தென்மாவட்டத்தில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், உப்புத் தொழில் செய்வோருக்கும் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணத் தொகையாக தமிழக அரசு வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட விவசாயிகள், உப்பள தொழில் செய்வோர் ஆகியோருக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மத்திய-மாநில அரசுகளுக்கு இருக்கிறது. ஆனால் தமிழக அரசோ தென் மாவட்டங்களை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. இதுவரை அந்தப் பகுதிகளில் அரசின் சார்பாக எந்தவொரு முறையான கணக்கெடுப்பும் நடைபெறவில்லை. பாதிக்கப்பட்ட மக்களை மத்திய – மாநில அமைச்சர்கள் சந்தித்ததாகவும் தெரியவில்லை. ஏதோ ஒருவித அலட்சியப் போக்கு காரணமாக நிவாரணப் பணிகளில் தென்மாவட்டங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலை நீடிக்குமேயானால் பாதிக்கப்பட்ட மக்களிடையே கடும் கொந்தளிப்பு ஏற்படும் என்பதை தமிழக ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்.

சமீபத்தில் பெய்த கடும் மழையால் நெடுஞ்சாலைகள், இணைப்புச் சாலைகள், சிறிய பாலங்கள் கடுமையாக சேதமடைந்து போக்குவரத்துக்கு பெரியளவில் இடையூறாக இருந்து வருகின்றன. இதை போர்க்கால அடிப்படையில் விரைவான நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாக இச்சாலைகளை புதுப்பித்து போக்குவரத்தை மீண்டும் தொடருவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும். மேலும் தூத்துக்குடி மாநகரில் கழிவுநீரை வெளியேற்றுவதற்கான  ஓடைகள் அமைக்கப்பாத காரணத்தால் கடுமையான சுகாதார சீர்கேட்டிற்கு மக்கள் ஆளாகியுள்ளார்கள். இந்நிலையிலிருந்து அந்த மக்களை பாதுகாக்கின்ற வகையில் கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்பட வேண்டும்.

சமீபத்தில் மத்திய நிதியமைச்சரை சந்தித்த முதலமைச்சர் ஜெயலலிதா சிறு, குறு தொழில் வளர்ச்சிக்காக மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இத்தகைய தொழில்கள் வளர்வதற்காகவே கடந்த ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கங்கை கொண்டான் மின்னணு பூங்கா ஆகியவை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதை முடக்குகிற நடவடிக்கைகளில் அ.தி.மு.க. அரசு ஈடுபட்டு வருகிறது. ஒருபக்கம் சிறு, குறு தொழிலுக்கு ஆதரவாக பேசுவது, மறுபக்கம் அதை முடக்குகிற நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது ஜெயலலிதாவின் இரட்டை வேடத்தைத் தான் தோலுரித்துக் காட்டுகிறது.

கடும் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சிறு, குறு தொழில்களுக்கான கடனை மறுசீரமைப்பு செய்வதோடு, வட்டியை முற்றிலும் தள்ளுபடி செய்து, திரும்பவும் தொழில் தொடர்ந்து நடைபெற அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். ‘மேக் இன் இந்தியா” என்கிற முழக்கத்தை முன்வைக்கிற நரேந்திர மோடி அரசு சிறு, குறு தொழிலை காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்க முன்வர வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *