தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 21.11.2016
தமிழகத்தில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இடஒதுக்கீட்டு அடிப்படையில் சமூகநீதியை நோக்கமாகக் கொண்டு கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட, பின்தங்கிய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2010 ஆம் ஆண்டு முதல் தேசிய அளவிலான ஒரே நுழைவுத் தேர்வின் மூலம் தொழிற்கல்விகளில் மாணவர்கள் சேர்க்கையை நடத்துவதற்கான முயற்சியில் இந்திய மருத்துவ கழகம் ஈடுபட்டு வந்தது. இந்த முடிவுக்கு எதிராக 2013 இல் மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு தடையாணை விதித்திருந்தாலும் 2016 இல் மீண்டும் நுழைவுத் தேர்வு நடத்துவதற்காக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நடத்தி மாணவர்களை தேர்வு செய்திருக்கிறது. ஆனால் தமிழ்நாடு அரசு வலியுறுத்தியதன் அடிப்படையில் நடப்பாண்டில் மட்டும் நுழைவுத் தேர்வு நடத்தாமல் பழைய முறையிலேயே மாணவர்கள் சேர்க்கையை அனுமதிக்க மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது.
இந்நிலையில் 2017 ஆம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு குறித்த அறிவிக்கைகள் டிசம்பர் மாதத்தில் வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லி சென்ற தமிழக கல்வி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடுத்த கல்வியாண்டு முதல் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு தமிழகத்தில் நடத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் இத்தேர்வை எழுதுகிற கிராமப்புற ஏழைஎளிய மாணவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என்று கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த முடிவை எந்த அடிப்படையில் எடுத்தார் என்பதை இதுவரை எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதுபோன்ற கொள்கை முடிவுகளை அமைச்சரவையில் விவாதித்து எடுக்கப்பட்டதா ? குறைந்தபட்சம் அனைத்து கட்சியினரையும் அழைத்துப் பேசி முடிவெடுக்க தயக்கம் காட்டுவது ஏன் ? கல்வித் துறையில் தமிழகம் மிகப்பெரிய குழப்பத்தை நோக்கி சென்று கொண்டிருப்பது மிகுந்த கவலையைத் தருகிறது.
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகம் தனித்தன்மை வாய்ந்ததாகும். தமிழகத்தில் மருத்துவ கல்விக்காக ஆண்டுதோறும் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. தமிழகத்தில் மொத்த மருத்துவ படிப்பிற்கான இடங்கள் 6510. இதில் 24 அரசு மருத்துவ கல்லூரிகளில் 3450 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் 3060 இடங்களும் உள்ளன. இந்நிலையில் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவ மாணவர்கள் ஏறத்தாழ 5 ஆயிரம் மருத்துவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் படித்து வெளியே வருகிறார்கள். இந்தச் சூழலில் மருத்துவ நுழைவுத் தேர்வு மத்திய இடைநிலை கல்வி வாரியத்தால் (CBSE), அதன் பாட திட்டத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இந்த பாடத்திட்டத்தின்படி 12 ஆம் வகுப்பில் 13625 மாணவர்கள் மட்டுமே படிக்கிறார்கள். ஆனால் மாநில பாட திட்டத்தின்படி 8 லட்சத்து 33 ஆயிரத்து 682 மாணவர்கள் படிக்கிறார்கள். கிட்டத்தட்ட 60 மடங்கு அதிகமாக தமிழ்நாடு மாநில பாட திட்டத்தின்படி கூடுதலாக படிக்கிறார்கள்.
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மத்திய பாடத்திட்டத்தின்படி நடைபெறுவதால் மாநில பாட திட்டத்தின்படி படித்த 8 லட்சம் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழைஎளிய வகுப்பில் பிறந்த பின்னணி கொண்டவர்கள். பாடத்திட்டத்தின் அடிப்படையில் பார்க்கிற போது மத்திய பாட திட்டத்திற்கும், மாநில பாடத்திட்டத்திற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. இந்த வேறுபாடுகளை அகற்றாமல் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களை அனுமதிப்பது மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இதன்மூலம் வேறு மாநிலத்தைச் சார்ந்த மாணவர்கள் பயனடைய வாய்ப்புகள் ஏற்படும். இந்த வேறுபாடுகளை பயிற்சி வகுப்புகளால் போக்கிவிட முடியாது. அடிப்படையில் பாடத் திட்டத்தில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
கல்வியில் அனைவருக்கும் சமஉரிமையும், சம வாய்ப்பும் உருவாக்கித் தராமல் அனைவருக்கும் சம தகுதி என்று பேசுவதில் எந்த பொருளும் இல்லை. சம நிலையில் உள்ளவர்களுக்குத் தான் சமநிலை போட்டி இருக்க முடியுமே தவிர, ஏற்றத்தாழ்வுகள் உள்ள நிலையில் இத்தகைய போட்டிகள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். இதன்மூலம் தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர் அமைத்துக் கொடுத்த சமூகநீதி குழிதோண்டி புதைப்பதற்கு தமிழக ஆட்சியாளர்களே துணைபோவதை எவரும் ஏற்றுக் கொள்ள முடியாது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் போது தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக மாணவர்களை பாதுகாப்பதற்கு தனிச் சட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அன்று அவர் கொடுத்த வாக்குறுதியை இன்றைய கல்வியமைச்சர் காற்றில் பறக்கவிட்டது ஏனென்று தெரியவில்லை.
எனவே, தமிழக மாணவர்களின் எதிர்காலம் குறித்த நுழைவுத் தேர்வு பிரச்சினையில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்டி கருத்து கேட்கப்பட்டு இறுதி முடிவெடுக்க தமிழக ஆட்சியாளர்கள் உடனடியாக முன்வர வேண்டும். அத்தகைய முயற்சிகள் எடுக்காமல் நுழைவுத் தேர்வை ஏற்றுக் கொள்கிற முடிவு தற்கொலைக்குச் சமமானதாகும். மத்திய – மாநில அரசுகளின் இப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.
Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in
/homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line
24
Related Articles
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை, காவிரி நடுவர்மன்ற தீர்ப்பின்படி வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு வழங்காததால் தமிழகமே வறட்சியின் கோரப்பிடியில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீட்டர் கிடைக்கப் பெறுவது வழக்கம். கடந்த...
தேசப்பிதா அண்ணல் மகாத்மா காந்தியடிகள் பிறந்தநாள், முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் மற்றும் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவுநாள் நிகழ்ச்சிகள் இன்று சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்கள் மலர்களால் அலங்கரித்து...