தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 23.12.2015 

Featuredஇந்தியாவிலேயே சர்க்கரை உற்பத்தியில் நான்காவது இடத்தில் இருந்த தமிழகம் மத்திய – மாநில அரசுகளின் தவறான கொள்கை முடிவுகளின் காரணமாக கரும்பு விவசாயமே அழிந்து விடுகிற அவலநிலை ஏற்பட்டுள்ளது. 2011-12 இல் 3.35 லட்சம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்த நிலையிலிருந்து 2014-15 இல் 2.55 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. அதேபோல சர்க்கரை உற்பத்தி 24.43 லட்சம் டன்னிலிருந்து 13 லட்சம் டன்னாக படுபாதாளத்தில் விழுந்துள்ளது. தமிழகத்தில் தனியார் கரும்பு ஆலைகளும், அரசு பொதுத்துறை ஆலைகளும் விவசாயிகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.1500 கோடியாக கடந்த இரண்டு வருடங்களாக வழங்கப்படாமல் மறுக்கப்பட்டு வருகிறது. ஒருபக்கம் இயற்கை சீற்றத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையான பாதிப்பு; மறுபக்கம் சாகுபடி செய்யப்பட்ட கரும்புக்கு தர வேண்டிய தொகையை தராமல் ஏற்படுகிற பாதிப்பு என பலமுனைகளில் கரும்பு விவசாயிகள் கடுமையான துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள்.

2013-14 இல் ஒரு டன் கரும்புக்கு மத்திய அரசின் விலை ரூ.2,100 ஆகவும், மாநில அரசு கூடுதலாக ரூ.450 சேர்த்து ஆக ரூ.2,550 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் 2014-15 இல் மத்திய அரசின் விலையோடு சேர்த்து மாநில அரசின் விலை கடந்த ஆண்டை விட ரூ.100 குறைக்கப்பட்டு ரூ.350 மட்டுமே தரப்பட்டது. இந்நிலையில் உரவிலை, வெட்டுக்கூலி, போக்குவரத்து செலவு, மின்வெட்டு போன்ற காரணங்களால் கரும்பு விவசாயம் நஷ்டமடைகிற தொழிலாக மாறி வருகிறது.

கரும்பு விவசாயிகள் ஒரு டன்னுக்கு ரூ.3,500 தர வேண்டும் என்கிற கோரிக்கை எழுப்பப்பட்டிருக்கிற வேளையில் தனியார் கரும்பு ஆலைகள் வழங்க வேண்டிய நிலுவைத் தொகையான ரூ.1,500 கோடியை வழங்காமல் இருக்கிற காரணத்தால் தமிழக கரும்பு விவசாயிகள் பெரும் கடன் சுமையோடு வாழ்ந்து வருகிறார்கள். கடந்த காலத்தில் பார்கவா திட்டத்தின்படி தனியார் ஆலைகள் லெவி சர்க்கரை போக 90 சதவீத சர்க்கரை விற்கப்படுவதால் ஏற்படுகிற லாபத்தில் பங்கீடு தர வேண்டும் என்கிற 5ஏ விதி பின்பற்றப்படாமல் இருந்து வருகிறது.

கர்நாடகத்தில் ஆளுகிற காங்கிரஸ் அரசு கரும்பு விவசாயிகளுக்கு கடந்த 2 ஆண்டுகளாக ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அத்தகைய ஊக்கத் தொகையை வழங்க தமிழக அரசு தயாராக இல்லை. தமிழகத்தில் சர்க்கரை மீது அண்டை மாநிலங்களில் இல்லாத 5 சதவீத மதிப்பு கூட்டுவரி (ஏயுவு) விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் கரும்பு ஆலைகள் கூடுதல் சுமையாக ஒரு டன் சர்க்கரையில் ரூ.1,200 கூடுதலாக சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக கரும்பு ஆலைகள் உற்பத்தி செய்கிற ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3.15 விலைக்குத் தான் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்குகிறது. ஆனால் சில நேரங்களில் அதையும் வாங்க மறுத்து வருகிறது. இந்நிலையில் வெளி மாநிலங்களிலிருந்து தனியார் துறையில் ரூ.12-க்கு அதிக விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இதற்குக் காரணம் அ.தி.மு.க. ஆட்சியாளர்களின் ஊழல் போக்குதான்.

கரும்பு ஆலைக் கழிவுகளிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்து பெட்ரோலில் கலந்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டால் ஒரு டன் கரும்பிற்கு ரூ.3,500 வழங்குவதற்கு கரும்பு ஆலைகள் தயாராக இருக்கின்றன. ஆனால் தமிழக அரசு இதை ஊக்கப்படுத்துவதற்கு தயாராக இல்லை என்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது.

எனவே, தமிழக கரும்பு விவசாயிகளின் இன்னலைப் போக்குகிற வகையில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.1,500 கோடி நிலுவைத் தொகை மற்றும் 2015-16 ஆண்டுக்கான கரும்பு விலை நிர்ணயம் செய்யாமல் இருப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாய சங்கங்கள் நடத்துகிற போராட்டத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண கரும்பு விவசாயிகள், கரும்பு ஆலைகள், தமிழக அரசு அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *