கிறிஸ்துமஸ் பண்டிகை : தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் விடுக்கும் வாழ்த்துச் செய்தி – 24.12.2015

Picture1

கருணை, சகிப்புத்தன்மை ஆகிய நற்குணங்களின் மறுவடிவமாக அவதரித்த இயேசு பிரான் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் நாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

புறக்கணிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சேவை செய்வதில் முன்னணிப் பங்கு வகிக்கிற கிறிஸ்துவ சமுதாயத்தினர் தொடர்ந்து அப்பணியை செய்வதற்கு இயேசு பிரானின் போதனைகள் பேரூதவியாக இருந்து வருகின்றன. அவரது வழிகாட்டுதலின் அடிப்படையில்தான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்த பெருமக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இந்தியாவில் 3 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிற கிறிஸ்துவ சமுதாயத்தினர் மீது சமீபகாலமாக பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டு வருவது மிகுந்த வேதனையைத் தருகிறது. மதமாற்றத்தின் மூலமாக தங்களது எண்ணிக்கையை வளர்த்துக் கொள்வதாக கூறுகிற குற்றச்சாட்டில் கடுகளவு உண்மை இல்லை என்பதற்கு நிறைய சான்றுகள் உள்ளன. 1952 இல் 2.34 சதவீதமாக இருந்த அவர்களின் எண்ணிக்கை கடந்த 60 ஆண்டுகளில் 3 சதவீதத்தைக் கூட அடையவில்லை என்பதை பார்க்கிற போது கிறிஸ்துவ பெருமக்களின் சமூகத் தொண்டு என்பது அப்பழுக்கற்றதாகும். அதேபோல சமீபத்தில் வெள்ளப் பெருக்கினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உறுதுணையாக இருந்து நிவாரண உதவிகள் செய்ததில் கிறிஸ்துவ சமுதயத்தினரின் பங்கை எவரும் மறந்துவிட முடியாது. அத்தகைய பெருமக்கள் மீது நிகழ்த்தப்படுகிற தாக்குதல்களை இந்திய தேசிய காங்கிரஸ் தடுத்து நிறுத்தி, பாதுகாவலனாக செயல்படும் என்பதை உறுதியாக கூற விரும்புகிறேன்.

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *