தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 24.12.2015 

EVKS-Elangovan

தமிழகத்தின் கிராமப்புறங்களில் பொங்கல் பண்டிகை சமயத்தில் ஜல்லிக்கட்டு என்கிற பாரம்பரிய விளையாட்டு காலம் காலமாக நடத்தப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகை என்பது குறிப்பாக மாட்டுப் பொங்கல் அன்று விவசாயத்திற்கு பயன்படும் காளை மாடுகளை மையமாக வைத்து வணங்கிப் போற்றுவது அதன் சிறப்பாக இருந்தது. அதே நேரத்தில் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் நடைபெற்று வருகிற ஜல்லிக்கட்டு குறித்து தவறான புரிதலின் காரணமாக சில சமூக ஆர்வலர்கள் அதற்கு எதிரான கருத்துக்களை திரட்டுவது, நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது என பலமுனைகளில் செயல்பட்டு வந்தனர். இதனடிப்படையில் இந்திய விலங்குகள் வாரியத்தின் பொறுப்பில் இன்றைய மத்திய அமைச்சர் மேனகா காந்தி இருந்த போது தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு குறித்து கடுமையான எதிர்ப்புகளை வெளியிட்டு வந்தார். இந்தப் பின்னணியில் தான் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் நாளில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் காட்சிப் பொருளாக பயன்படுத்தக் கூடாத பிராணிகள் பட்டியலில் காளை மாடுகளை சேர்த்து ஓர் அறிவிக்கை வெளியிட்டது.

தமிழகத்தில் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க வேண்டுமென்றும், மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டுமென்றும் உச்சநீதிமன்றத்தில் சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கு கடந்த மே 7, 2014 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் மத்திய அரசின் 11.7.2011 ஆம் நாளிட்ட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை செல்லுபடியாகும் என்று கூறியது. இதற்குப் பிறகு நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதன் மூலமாகத்தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் கடந்த 18 மாதங்களாக மத்திய பா.ஜ.க. அரசு நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு என்ன முயற்சிகளை மேற்கொண்டது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு அக்கட்சிக்கு இருக்கிறது.

அ.தி.மு.க.வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் 37 பேரும், மாநிலங்களவையில் 11 பேரும் ஆக 48 உறுப்பினர்களை வைத்துக் கொண்டு கடந்த 18 மாதங்களாக ஜல்லிக்கட்டு நடத்த சட்டத் திருத்தம் கொண்டு வருவதற்கு என்ன முயற்சிகளை செய்தார்கள் என்பதை தமிழக மக்களுக்கு ஜெயலலிதா விளக்க வேண்டும். அவரை அடிக்கடி சந்திக்கிற பிரதமரையோ, மத்திய அமைச்சர்களையோ இதுகுறித்து வலியுறுத்தி பேசினாரா ? இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதுவது ஒரு கண்துடைப்பு நாடகமாகும்.

அதேபோல, தமிழகத்தைச் சேர்ந்த மத்திய பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தேசியச் செயலாளர் எச். ராஜா, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் ஜல்லிக்கட்டு நடத்த இதோ ஆணை வருகிறது, அதோ சட்டத் திருத்தம் வருகிறது என்று வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று நாள்தோறும் ஊடகங்களில் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இன்னும் இரண்டு நாட்களில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆணை பிறப்பிக்கப் போகிறார் என்று பா.ஜ.க.வினர் கூறி இதுவரை எந்த ஆணையும் பிறக்கவில்லையே ? தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய பிரச்சாரத்தை பா.ஜ.க.வினர் செய்து வருகிறார்கள்.

கடந்த 18 மாதங்களில் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வராத பா.ஜ.க. இன்றைக்கு அவசர சட்டத்தின் மூலமாகத் தான் ஜல்லிக்கட்டு நடத்த முடியும். மக்கள் விரோத நில கையகப்படுத்துதல் அவசரச் சட்டத்தை கொண்டு வந்து 5 முறை நீட்டித்த பா.ஜ.க. இன்றைக்கு தமிழக மக்களின் கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டு வர என்ன தயக்கம் ?

தமிழகம் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாட இருக்கிறது. இத்தருணத்தில்தான் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய சூழலை உருவாக்கவில்லை என்றுச் சொன்னால் அதற்கு மத்தியில் ஆட்சி செய்கிற பா.ஜ.க.வும், மாநிலத்தில் ஆட்சி செய்கிற ஜெயலலிதாவும்தான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *