தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை-25.11.2016

maxresdefaultகடந்த நவம்பர் 8 ஆம் தேதி இரவு ரூபாய் 500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை எதிர்த்து நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்கள் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த முடிவை எதிர்த்து தேசிய அளவில் அனைத்து எதிர்கட்சிகளும் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் ஓரணியில் திரண்டு எதிர்ப்புக் குரல் கொடுத்து போராடி வருகின்றனர். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போது பிரதமர் பங்கேற்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்ள பா.ஜ.க. தயாராக இல்லை. முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்கள் உடல் நலமில்லாத நிலையிலும் நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்து பிரதமர் மோடி அறிவிப்பால் ஏற்பட்டுள்ள பேரழிவை கடுமையாக விமர்சனம் செய்தார். தமது இயல்பு நிலைக்கு மாறாக தமது உரையில் திட்டமிட்டு நாட்டில் கொள்ளை நடைபெறுவதாகவும், இது மக்களது பணத்தை அபகரிக்கும் முயற்சி என்றும், இத்தகைய நிர்வாகத் தோல்வி நாட்டை பேரழிவுக்கு தள்ளிவிடும் என்றும் அபாய சங்கு ஊதியிருக்கிறார். இதுகுறித்து பா.ஜ.க.வினர் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் பிரதமரின் அறிவிப்பு வந்தது முதற்கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்காக களத்தில் நின்று இளந்தலைவர் ராகுல்காந்தி போராடி வருகிறார்.
பிரதமர் மோடியின் அறிவிப்பால் பெரிய வர்த்தக நிறுவனங்களோ, தொழிலதிபர்களோ பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. மொத்த மக்கள் தொகையில் 1 சதவீதத்தினர் மட்டுமே வருமான வரி கட்டுகிற நாட்டில் 90 சதவீத பரிமாற்றங்கள் பணத்தின் மூலமே நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஏழைஎளிய, நடுத்தர மக்களின் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகளில் 86 சதவீதத்தை செல்லாது என அறிவித்து, அதன்மூலம் 100 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தங்களது பணத்தை பரிமாற்றம் செய்வதற்காக வங்கி மற்றும் ஏ.டி.எம்.களின் முன்பாக மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டிய அவலம் இன்றைக்கு ஏற்பட்டுள்ளது. 60 கோடி மக்களுக்கு வங்கி கணக்கே இல்லை என்பதை பா.ஜ.க. அரசு புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
ஜன்தன் யோஜனா என்கிற திட்டத்தின்கீழ் துவக்கப்பட்ட 25 கோடி வங்கிக் கணக்குகளில் நவம்பர் 9 ஆம் தேதி வரை ரூபாய் 45 ஆயிரத்து 200 கோடி தான் டெபாசிட் இருந்தது. இதற்குப் பிறகு கடந்த 15 நாட்களில் ரூபாய் 21 ஆயிரம் கோடி இந்த வங்கிக் கணக்குகளில் கூடுதலாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கருப்புப் பணத்தை வெள்ளையாக்குவதற்கு பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டமே பயன்படுத்தப்பட்டிருப்பது மத்திய பா.ஜ.க. அரசின் கையாலாகாததனத்தை அம்பலப்படுத்தியுள்ளது. இன்றைக்கு புழக்கத்தில் இருக்கிற பழைய நோட்டுக்களை, புதிய நோட்டுகளாக முழுமையாக மாற்றுவதற்கு இன்னும் ஓராண்டிற்கு மேலாகும் என்று ரிசர்வ் வங்கியின் அச்சடிப்புதிறன் அடிப்படையில் வெளிவருகிற செய்தி நமக்கு மேலும் மிகுந்த அதிர்ச்சியை தருகிறது.
இதையெல்லாம் முன்கூட்டியே திட்டமிடாமல் கருப்பு பணத்தை ஒழிக்கும் அவதார புருஷராக தன்னை காட்டிக் கொள்ள நரேந்திர மோடி நடத்திய நாடகம் மிகப்பெரிய தோல்வியை நோக்கி சென்றுக் கொண்டிருக்கிறது.
மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத முடிவை கண்டித்து நவம்பர் 28 ஆம் தேதி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட வேண்டுமென்று தேசிய அளவில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்கட்சிகளும் முடிவெடுத்து அறிவித்துள்ளன. இதனடிப்படையில் தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அதே நாளில் நடத்துகிற கண்டன ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்கிறது.
மாவட்டங்களில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் தலைமமையில் பெருந்திரளான காங்கிரஸ் கட்சியினர் கண்டன வாசக அட்டை மற்றும் மூவர்ண கொடியினை கையில் ஏந்தி பிரதமர் மோடியின் மக்கள் விரோத நடவடிக்கையை எதிர்த்து எதிர்ப்புக் குரல் கொடுக்க வேண்டும். இந்த ஆர்ப்பாட்டத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இன்னாள் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டார, நகர, பேரூராட்சி மற்றும் கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தோழர்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *