தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி..இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.12.2015

EVKS-Elangovanசமீபத்தில் பெய்த கடும் மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் மக்கள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி, அதிலிருந்து மீளமுடியாமல் தவித்து வருகிறார்கள். ஆட்சியாளர்கள் மீது இவர்களுக்கு கடும் கோபம் இருப்பதை காண முடிகிறது. 600-க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்டதோடு, தங்களது உடமைகள் அனைத்தும் ஒரு நொடிப் பொழுதில் வீணாகிப் போனதைக் கண்டு வேதனையில் துன்பப்பட்டு வருகிறார்கள். இவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்குக் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதலமைச்சர் தயாராக இல்லை என்றுச் சொன்னால் தமிழ்நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்ற கேள்வியைத் தான் கேட்கத் தோன்றுகிறது.

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து முன்னறிவிப்பு இல்லாமல் இரவு நேரத்தில் ஒரு நொடிக்கு 30 ஆயிரம் கனஅடி நீரை திறந்தால் மக்கள் எந்தளவுக்கு பாதிக்கப்படுவார்கள் என்பதை முன்கூட்டியே அறியாத ஒரு முதலமைச்சரை நாம் பெற்றிருக்கிறோம். இந்த நீரோடு காஞ்சீபுரம், திருவள்;ர் மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கினால் ஏற்பட்ட 70 ஆயிரம் கனஅடி நீரும் சேர்ந்தால் சென்னை மாநகரம் பேரழிவுக்கு ஆளாகும் என்பதை அறியாத ஒரு முதலமைச்சர் மீது நீதி விசாரணை நடத்தப்பட வேண்டாமா ? இந்த பேரழிவுக்கான பொறுப்பை அவர் ஏற்க வேண்டாமா ?

மக்களாலே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். அரசை வழிநடத்துகிற முதலமைச்சருக்கு தொலைநோக்குப் பார்வை இருக்க வேண்டும். கடந்த காலத்தில் ஆட்சி செய்த முதலமைச்சர்களுக்கு தொலைநோக்கு இருந்ததால் தான் வளமான தமிழகத்திற்கு அடித்தளம் அமைக்கும் வகையில் தொழிற்சாலைகள், ஊரக வளர்ச்சித் திட்டங்கள் மின் உற்பத்தி, பரம்பிக்குளம் – ஆழியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. ஆனால் மக்களை வாக்குவங்கி வழங்குகிற எந்திரமாக கருதி இலவசங்களை விநியோகிப்பதை மட்டுமே நம்பி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் எதிர்கால திட்டமாக இருந்தால் அந்த மாநிலத்தை எவராலும் காப்பாற்ற முடியாது. இன்று திட்டங்களில் முதலீடு செய்தால்தான் எதிர்கால தமிழகம் பயனடையும் என்பதை ஆட்சியாளர்கள் உணரவில்லை என்றால் அது தமிழகத்திற்கு நேர்ந்துவிட்ட சாபக்கேடாகும்.

கடந்த 40 ஆண்டுகளில் கடலுக்குச் சென்ற உபரிநீர் ஏறத்தாழ 3,000 டி.எம்.சி. இந்த ஆண்டு சராசரி 75 டி.எம்.சி. தமிழகத்தின் அணைகள் தூர் வாரப்படாத காரணத்தால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வெள்ளத்தில் சராசரியாக கடலில் கலக்கும் உபரிநீர் 260 டி.எம்.சி. இந்த புள்ளி விபரம் அரசு வழங்குவது என்பது குறிப்பிடத்தக்கது. உண்மையில் வெள்ளக் காலங்களில் 400 டி.எம்.சி. கடலில் கலக்கிறது என்பது நிபுணர்களின் கூற்றாகும். தமிழகத்தில் 25 நீர்த் தேக்கங்களில் மொத்த கொள்ளளவு கிட்டத்தட்ட 6,000 மில்லியன் கனமீட்டர். இதில் சேற்றின் அளவு மட்டும் சுமார் 2,000 மில்லியன் கனமீட்டர் என்று ஆதாரப்பூர்வமான செய்திகள் கூறுகிற போது தமிழ்நாட்டு நலனில் அக்கறையுள்ள எவரும் கவலைக் கொள்ளாமல் இருக்க முடியாது.

தமிழக ஆட்சியாளர்கள் தூர் வாராமல் அலட்சியமாக இருந்த காரணத்தால் குவிந்துவிட்ட சேறு என்பது அரசு நிர்வாகத்தில் ஏற்பட்ட கோளாறுகளாகும். இதை அழிவின் குறியீடாக கருத வேண்டும். இது தமிழகத்தை ஆண்டுக் கொண்டிருக்கிற ஆட்சியாளர்கள் மீது படிந்துள்ள துடைக்க முடியாத கரையாகும். இத்தகைய கரைபடிந்த ஆட்சியைத்தான் தமிழக மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். அவர்களின் 28 ஆவது நினைவுநாளில் அவரது சமாதிக்கு மலரஞ்சலி செலுத்திய ஜெயலலிதா அங்கே அமைக்கப்பட்டிருந்த மேடைக்குச் சென்று ஆண்டுதோறும் எடுக்கிற உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் ஒரு நிமிடங்கள் கூட பங்கேற்க முடியாத நிலை இருப்பதை வேதனையோடு பார்க்க முடிகிறது. தமிழகத்தில் பல்கிப் பெருகி வருகிற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண இன்றைய முதலமைச்சரால் சாத்தியமா என்பதை சிந்திக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சராக இவர் தொடர்ந்து நீடிப்பது நியாயமா ?


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *