தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.சு.திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 26.10.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 26.10.2016

thirunavukkarasar_11641eஇந்திய மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட தொழில் சீர்திருத்தங்களுக்கான செயல்திட்டங்கள் குறித்த நிலவரங்களை மத்திய வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை கடந்த 18, 19 அக்டோபர் 2016 ஆம் நாளில்  ஆய்வு செய்து கள நிலவரத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளது. இதில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் மொத்த மதிப்பெண்கள் 100 என்ற அடிப்படையில் முதலாவதாக ஆந்திர மாநிலம் 99.09, இரண்டாவதாக தெலுங்கானா 99.09, மூன்றாவதாக குஜராத் 97.92 என வரிசைப்படுத்தப்பட்ட பட்டியலில் தமிழகம் 18 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டு 62.80 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றுள்ளது.
தமிழகம் தொழில் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளில் இத்தகைய பின்னடைவை அடைந்ததற்கு என்ன காரணம் என்பதை கவலையோடு பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு 23 ஆவது இடத்திலிருந்த உத்தரகாண்ட் மாநிலம் 13 ஆவது இடத்திற்கு  தற்போது முன்னேறியிருக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் சீர்திருத்தங்களை வேகமாக செய்து அதிகளவில் முதலீடுகளை பெறுவதற்கு கடுமையான போட்டி போட்டுக் கொண்டு தங்களது மாநில வளர்ச்சிக்காக செயல்பட்டு வருகின்றன. இதற்காக சர்வதேச சுற்றுப்பயணங்கள், தொழில் முதலீட்டாளர்களை நேருக்கு நேராகச் சந்தித்து முதலீடுகளை பெறுவதற்கு பல்வேறு முயற்சிகளை முதலமைச்சர்களே நேரிடையாக செய்து வருகின்றனர்.
தற்போதுள்ள பட்டியலில் ஆந்திர மாநிலம், தெலுங்கானா மாநிலம் முன்னணிப் பங்கு வகிப்பதற்கு காரணம் அந்தந்த முதலமைச்சர் எடுத்துள்ள தீவிர முயற்சியாகும். இந்த முயற்சி வெற்றி பெறுவதற்கு காரணம் நிர்வாகத்திலே இருக்கிற வெளிப்படைத்தன்மை, முதலீடு செய்ய வருகிறவர்கள் முதலமைச்சரை நேரிடையாகச் சந்தித்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்கிற வாய்ப்புகள், மின்சார இணைப்புகள் பெறுவதில் சிக்கலற்ற போக்கு போன்ற பல்வேறு சாதகமான அம்சங்கள் இருப்பதால் இத்தகைய மாநிலங்கள் மிகப்பெரிய வளர்ச்சியைப் பெற்று வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் கடந்த செப்டம்பர் 9 – 10, 2015 இல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னை நந்தம்பாக்கத்தில் 100 கோடி செலவில் நடத்தி முடிக்கப்பட்டபோது ரூபாய் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக தமிழக அரசு அறிக்கையின் வாயிலாகக் கூறியது. ஆனால் ஏறத்தாழ ஓராண்டுகளாகியும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின்படி தொழிற்சாலைகள் தொடங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா ? என்கிற விவரங்களை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் விவசாய வளர்ச்சி குறைந்து வருகிறது. அதேபோல வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 31.3.2016 நிலவரத்தின்படி 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர் வேலை வாய்ப்பு கோரி பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 72 லட்சத்து 685 பேர் வேலை வாய்ப்பு பெறுவதற்காக கூடுதலாக பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு கூடி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் 560 பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆண்டுதோறும் படித்து வெளியே வருகிறார்கள். இவர்களுக்கான வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது.
எனவே, இத்தகைய அபாயகரமான சூழ்நிலையில் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை பெருக்காமல் வேலை வாய்ப்பை பெருக்க முடியாது. வேலை வாய்ப்பை பெருக்குவதற்கு தொழில்துறையில் சீர்திருத்தங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும். அதற்கான முயற்சிகளை தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *