தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 26.11.2015

EVKS-Elangovanஜனநாயகத்தின் நான்கு தூண்களில் ஒன்றான பத்திரிகைகளின் உரிமைகளை ஒடுக்குகிற பல்வேறு நடவடிக்கைகள் ஜெயலலிதாவின் கடந்தகால ஆட்சியில் நிகழ்ந்ததைப் போல தற்போதும் நிகழ்ந்து வருகின்றன. தம் ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை கூறுபவர்கள் எதிர்கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், பத்திரிகைகளாக இருந்தாலும் சகித்துக் கொள்கிற ஜனநாயகப் பண்பு ஜெயலலிதாவுக்கு இல்லாத காரணத்தால் அவர்களுக்கு எதிராக அடிக்கடி அவதூறு வழக்குகளை தொடுப்பதையும், கைது செய்து சிறையில் அடைப்பதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.

தமிழக மக்கள் மிகவும் விரும்பி படிக்கும் ‘ஆனந்த விகடன்” வார இதழில் ‘என்ன செய்தார் ஜெயலலிதா” என்ற தலைப்பில் நான்கரை ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியின் மக்கள் விரோத நடவடிக்கைகள் பட்டியலிட்டு வெளியிடப்பட்டது. இதை சகித்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா அரசு ஆனந்த விகடன் வார இதழ் மீது அவதூறு வழக்கை தொடுத்திருக்கிறது. இதன்மூலம் ஆனந்த விகடன் வாரஇதழை நசுக்கிவிடலாம் என்று ஆட்சியாளர்கள் கனவு காண்கிறார்கள். ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் தொடுக்கப்பட்ட 15 அவதூறு வழக்குகளை கண்டு அஞ்சாத  ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் குழுமம் இந்த நடவடிக்கைக்கும் அஞ்சப் போவதில்லை.

ஆனந்த விகடனில் வெளிவந்த இதே கட்டுரையை விகடன் முகநூலில் வெளியிடப்பட்டிருந்தது. இக்கட்டுரையை லட்சக்கணக்கான மக்கள் விரும்பி படித்திருக்கிறார்கள் என்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜெயலலிதா அரசு தனது அதிகார வேட்கையை பயன்படுத்தி விகடன் முகநூலை யாரும் பார்க்க முடியாத அளவுக்கு முடக்கி வைத்திருக்கிறது. இதைவிட ஜனநாயகப் படுகொலை வேறு என்ன இருக்க முடியும் ? இத்தகைய நடவடிக்கைகள் மூலம் தமிழகத்தில் ஹிட்லரின் ஆட்சி நடப்பதாகவே கருத வேண்டியிருக்கிறது.

கடந்த ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 2001 இல் டாக்டர் ராதா கிருஷ்ணன் சாலையில் ஊர்வலமாக சென்ற பத்திரிகையாளர்கள் அ.தி.மு.க.வினரால் அடித்து நொறுக்கப்பட்டார்கள். ஜெயலலிதாவின் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் செய்திக் கட்டுரை வெளியிட்டதற்காக ஹிந்து நாளேட்டின் பதிப்பாசிரியர் ரங்கராஜன், கட்டுரையாளர் வி. ஜெயந்த் ஆகியோருக்கு 7 நாள் சிறை தண்டனை வழங்கியதை எவரும் மறந்திருக்க முடியாது. இக்கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டதற்காக முரசொலி செல்வத்திற்கு 7 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த ஆட்சியில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக 120-க்கும் மேற்பட்;ட அவதூறு வழக்குகள் ஜெயலலிதாவால் தொடுக்கப்பட்டன.

2008 இல் சென்னை வானகரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு – பொதுக்குழு கூட்டத்தில் ‘தினத்தந்தி”, ‘தினமலர்” ஆகிய நாளேடுகளை பெயர் குறிப்பிட்டு கடுமையாக தாக்கியதோடு, இந்த பத்திரிகைகளுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டுமென்று வன்முறையை தூண்டும் வகையில் அ.தி.மு.க.வினரை ஜெயலலிதா உசுப்பிவிட்டதை எவராது மறந்திட இயலுமா ?

அமைச்சர்களை சந்திக்கும் அமைச்சரவை கூட்டத்தை கூட்டாத, பத்திரிகையாளர்களை சந்திக்க மறுக்கிற ஜனநாயக உணர்வே இல்லாத ஜெயலலிதா ஆட்சியில் ஜனநாயகத்தின் அடித்தளம் தகர்க்கப்படுகிற நடவடிக்கையாகத்தான் அவதூறு வழக்குகளை நாம் கருத வேண்டும். இத்தகைய ஜனநாயக படுகொலைகளை தடுத்து நிறுத்தி, முறியடிக்க அனைத்து அரசியல் கட்சிகளும், பத்திரிகைகளும் ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *