தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 27.12.2016

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. சு. திருநாவுக்கரசர் அவர்களின் அறிக்கை – 27.12.2016

2016-17-ம் ஆண்டுக்கான கரும்பு பருவத்திற்கு நியாமான மற்றும் ஆதாய விலையாக டன் ஒன்றுக்கு 2300 ரூபாய் என மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 2015-16-ம் ஆண்டு நிர்ணயித்த அதே தொகையான 2300 ரூபாயைத் தான் மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. அதேபோல தமிழக அரசும் கடந்த ஆண்டு அறிவித்த பரிந்துரை விலையான போக்குவரத்து செலவு 100 ரூபாய் உட்பட 550 ரூபாயைத் தான் நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. அதன் மூலம் கரும்பு விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு 2850 ரூபாய்தான் கிடைக்கும். இந்த அறிவிப்பு யானைப் பசிக்கு சோலப் பொறியை போடுவது போல ஆகும்.

கடந்த 3 ஆண்டுகளில் மத்திய மாநில அரசுகள் பரிந்துரை விலையான ரூபாய் 2850க்கு மேலாக வழங்காமல் இருப்புது கரும்பு விவசாயிகளை மிகப்பெரிய அளவில் பாதிக்கக் கூடியதாகும். கர்நாடகத்தில் வயல் விலையாக ஒரு டன் கரும்புக்கு ரூபாய் 2750, மகாராஷ்டிராவில் ரூபாய் 3000 என வழங்கப்பட்டு வருகிறது. இதனுடன் டன் ஒன்றுக்கு வெட்டுக்கூலியாக ரூபாய் 1000 கூடுதலாக வழங்கப்படுகிறது. ஆனால், கடந்த சில வருடங்களாக பரிந்துரை விலையை உயர்த்தாமல் கரும்பு விவசாயிகளை தமிழக அரசு கசக்கிப் பிழிந்து வருகிறது.

கரும்பு விவசாயிகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிற நேரத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட கரும்புக்கு ரூபாய் 1850 கோடி வழங்கப்படாமல் நிலுவைத் தொகையாக இருந்து வருகிறது. இதை தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து விவசாயிகளுக்கு பெற்று தருவதற்கு அதிமுக அரசு கடுகளவு முயற்சி கூட செய்ததில்லை. லாபத்தில் இயங்கி வந்த கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட தவறான நிர்வாகத்தின் காரணமாக ரூபாய் 2200 கோடி நஷ்டத்தில் சிக்கி சீர்குலைந்து வருகிறது.

கரும்பு விவசாயிகளுக்கு விலை நிர்ணயம் செய்ய, நிலுவை தொகையை பெற்றுத்தர, தமிழக அரசு தனியார் சர்க்கரை ஆலை பிரதிநிதிகள், விவசாய சங்கங்கிளின் பிரதிநிதிகள் ஆகியோரை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சு வார்த்தையை நடத்துவதன் மூலமாகவே பிரச்சனையை தீர்க்க முடியும். எனவே தமிழகத்தில் ஆறு லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்கிற கரும்பு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் ஆகியோரின் நலன்களை பாதுகாக்க உடனடி நடவடிக்களை தமிழக அரசு எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *