தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. .வெ.கி.. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 28.1.2016

maxresdefault-300x199விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாருக்குச் சொந்தமான எஸ்.வி.எஸ். சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூன்று மாணவிகள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லையென்றும், கல்விக் கட்டணம் அதிகமாக இருப்பதாகக் கூறியும் கடந்த ஓராண்டு காலமாக பல்வேறு போராட்டங்களை மாணவர்கள் நடத்தியுள்ளனர். மாவட்ட ஆட்சித் தலைவரை 6 முறை சந்தித்து எந்த பயனும் கிடைக்காத நிலையில் தீக்குளிப்பு போராட்டம் என இறுதியாக விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்கிற முயற்சியிலும் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவரோ எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

மாவட்ட ஆட்சித் தலைவரிடம் எந்த தீர்வும் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தரை சந்தித்து கோரிக்கையை மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதன்பிறகு கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி நான்கு மருத்துவர்கள் அடங்கிய குழு கல்லூரியை ஆய்வு செய்து அடிப்படை வசதிகள், உயர்ந்த கட்டணம் ஆகியவை குறித்து அறிக்கை வழங்கியது. ஆனால் அந்த அறிக்கை மீது எந்த நடவடிக்கையையும் எடுக்காத துணை வேந்தர் தொடர்ந்து ஆண்டுதோறும் வழங்குகிற அங்கீகாரத்தை மட்டும் அந்த கல்லூரிக்கு வழங்கியதன் பின்னணியில் அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக அந்த பகுதியைச் சேர்ந்த ஊரக தொழில்துறை அமைச்சர் பி. மோகன் கல்லூரி நிர்வாகத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். மேலும் இத்தற்கொலை நிகழ்ந்த பிறகு இதுவரை அமைச்சர் மோகன் பாதிக்கப்பட்ட மாணவ – மாணவிகளை சந்திக்காமல் இருப்பதில் பல்வேறு சந்தேகங்கள் எழுகிறது. அதுமட்டுமல்லாமல், அக்கல்லூரியின் தாளாளர் வாசுகி சுப்பிரமணியம் அமைச்சர் மோகனுக்கு நெருங்கிய உறவினர் என்கிற காரணத்தால்தான் ஆட்சியாளர்களால் எந்த நடவடிக்கையையும் எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

மேலும் வாசுகி சுப்பிரமணியம் அதே கல்லூரியில் படிக்க முற்பட்டவர், பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டு தேர்ச்சி பெறாத நிலையில் கல்லூரியின் உரிமையாளர் சுப்பிரமணியத்தை திருமணம் செய்து கொண்டு கல்லூரியின் தாளாளராக உயர்வு பெற்ற அதிசயம் அங்கே நிகழ்ந்துள்ளது. அதேபோல பல மாணவர்களை தேர்ச்சி பெறுவதற்கும், போலி ஆவணங்கள் வழங்குவதற்கும் பெரும் பணம் பெற்றுக் கொண்டதாகவும் அவர்மீது கடுமையான குற்றச்சாட்டு உள்ளது. அந்த கல்லூரி நிர்வாகத்தினால் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சினையை எதிர்கொள்ள ஆதிதிராவிடர் புரட்சிக் கழகத்தின் தலைவராக உள்ள வெங்கடேசன் என்பவரை பயன்படுத்தி மாணவர்கள் அச்சுறுத்தி,  மிரட்டி அடக்கி வைக்கப்பட்டுள்ளனர். இத்தகைய உபாயங்களை கையாண்ட நிலையில் இதை எதிர்கொள்ள வேறு வழியில்லாத நிலையில்தான் இறுதியாக கடும் மனஉளைச்சல் காரணமாக 3 மாணவிகளும் தற்கொலை செய்து கொண்ட கொடுமை நிகழ்ந்துள்ளது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 24 ஆம் தேதி சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தின் இரண்டாவது மாடியிலிருந்து சண்முகபிரீதா என்கிற 19 வயது மாணவி கீழே விழுந்து பலியான கொடுமை நிகழ்ந்துள்ளது. அதையொட்டி நேற்று அதிராமபட்டிணத்தில் பேராசிரியர்களின் ஓய்வறையில் மாணவி சுலோச்சனா தற்கொலை செய்து கொண்ட சோக செய்தி வெளிவந்துள்ளது. ஆக தொடர்ந்து தமிழகத்தில் மாணவிகள் தற்கொலை என்பது தொடர்கதையாக நிகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு, தற்கொலை நாடாக மாறிவிட்டதைத் தான் இத்தகைய சம்பவங்கள் உறுதி செய்கின்றன.

எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் அங்கீகாரம் பெற்று கல்லூரி நடத்தியதன் விளைவாக இத்தகைய கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. உரிய விசாரணைகள் மேற்கொள்வதற்கு முன்பாக எஸ்.வி.எஸ். கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அதில் படிக்கும் 130 மாணவ – மாணவியர்களை வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எனவே, எஸ்.வி.எஸ். கல்லூரியில் நிகழ்ந்துள்ள மூன்று மாணவிகளின் தற்கொலை குறித்து பாரபட்சமற்ற, நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும். அத்தகைய விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் மத்திய புலனாய்வுத்துறை விசாரிப்பதன் மூலமாகத்தான் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து, சட்டத்தின் பிடியில் கொண்டுவர முடியும். அத்தகைய விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக இக்கொடுமைக்கு முழுப் பொறுப்பேற்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் உடனடியாக பதவியிலிருந்து விலக்கப்பட வேண்டும். இப்படுகொலைக்கு காரணமாக கல்லூரி நிர்வாகத்தை காப்பாற்றுகிற முயற்சியில் ஈடுபட்ட தமிழக அமைச்சர் பி. மோகன், டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழக துணை வேந்தர் ஆகியோர் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *