மூன்றாவது முறையாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவோ, ஏழைஎளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கையே மீண்டும் உறுதி செய்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 29.2.2016

maxresdefault-300x199மத்திய பா.ஜ.க. அரசின் நிதியமைச்சர் அருண் ஜெட்லி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கை அனைத்து துறைகளிலும் தோல்வியடைந்ததையே வெளிப்படுத்துகிறது. தொழில் உற்பத்தியையோ, விவசாய வளர்ச்சியையோ ஏற்படுத்துவதற்கு எந்தவகையிலும் துணைபுரியாத நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை எந்த வகையில் ஆளுவது என்பது குறித்து பா.ஜ.க.வுக்கு இருக்கிற தெளிவற்ற கொள்கை வறட்சியை அருண் ஜெட்லியின் நிதிநிலை அறிக்கை படம்பிடித்து காட்டுகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மூன்று மாதத்தில் கருப்பு பணத்தை ஒழிப்போம் ; ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம் என்று தேர்தல் நேரத்தில் ஜாலவித்தை காட்டிய பா.ஜ.க. அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று நாடே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.

கருப்பு பணத்தை ஒழிக்க 2015 இல் சட்டம் கொண்டு வந்து அமல்படுத்தியதன் மூலம் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதிவரை தானாக முன்வந்து அறிவிக்கப்பட்ட கருப்பு பணம் ரூ.3,770 கோடி. இதில் ரூ.2,262 கோடி அரசுக்கு வருமானம் கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த காலத்தில் 1997 இல் கொண்டு வரப்பட்ட இத்தகைய திட்டத்தின் மூலம் அரசுக்கு ரூ.33 ஆயிரம் கோடி கருப்பு பணமும், அதிலிருந்து வரியாக ரூ.10 ஆயிரம் கோடியும் அரசுக்கு கிடைத்தது.

விவசாயிகளை துன்புறுத்துகிற வகையில் வருமான வரி விதிக்க வேண்டுமென்று பா.ஜ.க. அரசு முயற்சி செய்கிறது. அதேபோல குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய 23 பயிர் வகைகள் முடிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் விலையோடு மாநில அரசுகள் விலை உயர்த்தி வழங்குவதை தவிர்க்க வேண்டுமென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிற உர மானியமான ரூ.50,300 கோடியில் கிட்டத்தட்ட ரூ.17,500 கோடி பல்வேறு நிலைகளில் கசிவு ஏற்பட்டு விரயமாகிற நிலை ஏற்பட்டுள்ளது.

உர மானியத்தின் முழு பலனும் விவசாயிகளுக்கு கிடைப்பதற்காக கடந்த காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மானியங்களை நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்துகிற முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துகிற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டம், விவசாயிகளின் விலை பொருளுக்கு நியாயமான விலை கிடைக்க டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுதல் போன்றவற்றை நிறைவேற்றுவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு மாறாக விவசாய வருமான வரி உள்ளிட்ட விவசாய விரோத நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு எடுக்குமேயானால் அதற்கு எதிராக நாடு முழுவதும் கடும் போராட்டம் நடைபெறுகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.

மூன்றாவது முறையாக நிதியமைச்சர் அருண்ஜெட்லி சமர்ப்பித்துள்ள நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவோ, ஏழைஎளிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத போக்கையே மீண்டும் உறுதி செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *