Picture1தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 30.01.2016

சமீபத்தில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா வீடு மீது நேற்று நள்ளிரவில் ஆட்டோவில் வந்த அ.தி.மு.க.வினர் சரமாரியாக கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அங்கிருந்த அவரது கார் மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துவிட்டுச் சென்றுள்ளனர். இத்தகைய கொடூரத் தாக்குதல்கள் மூலம் பழ. கருப்பையாவின் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்படுவதற்கு சில காலத்திற்கு முன்பே தமிழக ஆட்சியாளர்களின் பல்வேறு தவறான செயல்பாடுகளை தொடர்ந்து விமர்சனம் செய்துக் கொண்டிருந்தார். இதை சகித்துக் கொள்ளாத அ.தி.மு.க. தலைமை பழ. கருப்பையாவை கட்சியிலிருந்து நீக்கிய பிறகு ஊடகங்கள் மூலம் ஜெயலலிதா ஆட்சியின் முறைகேடுகள், ஊழல்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கூட்டுக் கொள்ளை, ஜனநாயக விரோதச் செயல்களை பட்டியலிட்டு ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டி அம்பலப்படுத்தினார். பழ. கருப்பையாவின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு கூற தயாராக இல்லாத அ.தி.மு.க.வினர் கோழைத்தனமாக அவர்மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அ.தி.மு.க.வில் உட்கட்சி ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து, கொத்தடிமைகளின் கூடாரமாக அக்கட்சியை மாற்றிய ஜெயலலிதாவிடம் இத்தகைய அணுகுமுறையைத் தான் எதிர்பார்க்க முடியும். எப்பொழுதுமே அரசியல் ரீதியாக எதிரிகளை ஜனநாயகப்பூர்வமாக சந்திக்காமல் பழிவாங்கும் போக்குடன் செயல்படுவது ஜெயலலிதாவுக்கு கைவந்த கலையாகும்.

கடந்த காலத்தில் அ.தி.மு.க. ஆட்சியின் மது கொள்கைக்கு எதிராக கருத்துச் செறிவுமிக்க பாடல்களை இயற்றி, சமூக வலைத்தளங்கள் மூலம் மக்களை கவருகின்ற வகையில் பரப்பியதற்காக இரவோடு இரவாக தெருப்பாடகர் கோவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை எவரும் மறந்திருக்க முடியாது. அதேபோல சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவிற்கு ஜெயலலிதா பயணம் செய்யும் சாலை இருமருங்கிலும் சட்டவிரோதமாக நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனர்களை அகற்றியதற்காக அறப்போர் இயக்க பட்டதாரி இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். இத்தகைய ஜனநாயக விரோதச் செயல்களின் தொடர்ச்சியாகவே பழ. கருப்பையாவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.

அதேபோல, வேலூரில் தமிழ்ச் சங்கத்தினை பழ. கருப்பையா இன்று தொடங்கி வைப்பதாக இருந்த நிகழ்ச்சி அ.தி.மு.க.வினரின் மிரட்டல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு, சட்டவிரோத ஆட்சி நடைபெற்றிருப்பதையே இத்தகைய சம்பவங்கள் நினைவு கூறுகின்றன. தமக்கு சட்டமன்றத்தில் மிருகபல மெஜாரிட்டி இருப்பதாகக் கருதி ஆணவத்துடன் செயல்பட்டு வருகிற ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கு கடந்த நான்கரை ஆண்டுகளாக தலைவிரித்தாடி வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டிய நிலையில் உள்ள ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ள தமிழக அரசியல் கட்சிகள் பல்வேறு முனைகளில் வேறுபட்டு சிதறிக்கிடப்பதால் ஜெயலலிதாவின் ஜனநாயக விரோதச் செயல்கள் தங்கு தடையின்றி நடந்து வருகின்றன.

எனவே, தமிழகத்தில் நடைபெற்று வருகிற மக்கள் விரோத ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேறுபாடுகளைக் களைந்து ஓரணியில் திரள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

அதன்மூலமே கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் தமது கருத்துக்களை கூறிய பழ. கருப்பையா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு உரிய குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்தி தண்டிக்க முடியும்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *