தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை – 20.10.2015

????????????????????????????????????

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சுதந்திர இந்தியாவில் அதுவரை நிறைவேற்றப்படாத புரட்சிகரமான தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி சாதனை படைத்தது. இதற்கு முன்னர் அரசின் செயல்பாடுகள் குறித்து நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே கேள்வி கேட்டு பதில் பெறுகிற உரிமை வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த உரிமையை சாதாரண குடிமக்கள் பெறுகிற வகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி பொதுமக்கள் நலனுடன் தொடர்புடைய எந்த பிரச்சினை குறித்து, எந்தவொரு குடிமகனாலும் கேள்வி எழுப்ப முடியும், பதிலையும் பெற முடியும்.

ஒரு துறையின் சம்மந்தப்பட்ட அதிகாரி ஒரு பிரச்சினை குறித்து தகவல் கேட்கப்பட்ட 15 தினங்களுக்குள் தகவல் தர தவறினால் இச்சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த சட்டத்தின் வாயிலாக அரசு துறைகளில் ஊழல் எதுவும் நடக்காமல் தடுக்க முடியும். அன்னை சோனியா காந்தி தலைமையில் அமைந்த ஆலோசனைக் குழுவின் பரிந்துரையின் பேரில் டாக்டர் மன்மோகன்சிங் அரசு ஊழலுக்கு எதிராக எடுத்த முதல் துணிச்சலான நடவடிக்கையாக இச்சட்டம் கருதப்பட்டு, நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி ஆட்சியில் மிகச் சிறப்பாக செயல்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் தற்போது பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து முடக்கப்படுகிற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய தகவல் ஆணையத்தில் தலைமை பொறுப்பு உள்ளிட்ட உறுப்பினர் பதவிகள் ஆகஸ்ட் 2014 முதல் நிரப்பப்படாமல் காலியாக வைக்கப்பட்டிருந்தன. இதனால் 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் தேங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் தலைமை தகவல் ஆணையரின் அமர்வு முன்பாக 15,736 மனுக்கள் நிலுவையில் இருக்கின்றன. இந்த மனுக்களை பரிசீலித்து தீர்வு காண பல மாதங்கள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. நிலுவையில் இருக்கும் மனுக்களை தீர்வு காண்பதா ? புதிதாக வருகிற மனுக்களை பரிசீலிப்பதா ? என்கிற திரிசங்கு சொர்க்கத்தில் தகவல் ஆணையர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் ஊழலை ஒழிப்பதாக வேடம் தரித்து ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, தகவல் அறியும் உரிமைச் சட்டம் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவி பல மாதங்கள் காலியாக இருந்த நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்த பிறகுதான் அப்பதவி நிரப்பப்பட்டன. அதேபோல லோக்பால் சட்டத்தை செயல்படுத்துவதிலே பா.ஜ.க. அரசுக்கு கடுகளவும் அக்கறை இல்லாமல் இருக்கிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை மக்களின் நலன்சார்ந்து பயன்படுத்துகிற சமூக ஆர்வலர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் நடைபெற்ற ஊழலை அம்பலப்படுத்திய லலித் மேத்தா, மகாராட்டிரா மாநிலத்தில் நில அபகரிப்பை மக்கள் மன்றத்தில் கொண்டு வந்த சதீஷ் ஷெட்டி உள்ளிட்ட பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களது உரிமைகளை பாதுகாப்பதற்காக மத்திய காங்கிரஸ் அரசு கொண்டு வந்த ‘தகவல் தெரிவிப்போர் பாதுகாப்பு சட்டம் மார்ச் 2014″ இல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்து 16 மாதங்களாகியும் அதற்கான விதிகளை இயற்றாமல் முடக்கி வருகிறது. இந்த சட்டத்தை முழு மனதோடு நிறைவேற்றவில்லை என்றால் தகவல் தெரிவிப்போர்களுக்கு பாதுகாப்பற்றத்தன்மை உருவாகி, பதற்றம் ஏற்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படை தன்மையையே தகர்த்துவிடும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பொறுத்தவரை நகர்ப்புறங்களிலே ஏற்பட்ட விழிப்புணர்வை போல கிராமப்புறங்களில் ஏற்படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியவர்களில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள் வெறும் 14 சதவீதத்தினர்தான். நாட்டு மக்கள் அனைவரிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்துகிற வகையில் அதனுடைய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கி மாணவர்களின் பாடத் திட்டத்தில் இவை சேர்க்கப்பட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய காங்கிரஸ் அரசால் வெளிப்படைத்தன்மையோடு ஆட்சியாளர்கள் செயல்பட 2005 இல் கொண்டுவரப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டம் 10 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இதனுடைய சாதனைகள் நமக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் மத்திய பா.ஜ.க. அரசின் போக்குகள் நமக்கு மிகுந்த கவலையைத் தருகின்றன. 120 கோடி மக்களின் தகவல் அறிகிற உரிமையை மத்திய பா.ஜ.க. அரசு தடுக்குமேயானால் அதற்குரிய விலையை கொடுப்பதிலிருந்து தப்ப முடியாது.

TNCC President s Statement - 20.10.2015-page-001TNCC President s Statement - 20.10.2015-page-002

 


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *