தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் உண்ணாவிரதம்.

நாள் : 14.08.2015

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

இடம்: அனைத்து மாவட்ட , வட்டார, நகர, பேரூராட்சி தலைநகரங்கள்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்கள் விடுக்கும் அறிக்கை:-

மதுவிலக்கை அமல்படுத்துவதில் இந்தியாவிற்கே முன் மாதிரி மாநிலமாக திகழ்ந்த பெருமை தமிழகத்திற்கு உண்டு, பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலேயே-1937ல் இராஜாஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆட்சியில் அறிமுகப் படுத்தபட்ட மதுவிலக்கு 1967 வரை அமல்படுத்திய சிறப்பு காங்கிரஸ் கட்சிக்கு உண்டு பெருந்தலைவர் காமாராஜருக்கு உண்டு.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டு மது கொடுமையில் சிக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகளை வார்த்தைகளால் வடிக்க இயலாது, தமிழக அரசியலோடு சாராய சாம்ராஜிகளின் ஆதிக்கம் பின்னி பிணைந்து மக்களின் சீரழிவதற்கு வழிகொழியது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும்.

இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக ஆக்குவேன் என சூளுரைத்து ஆட்சியில் அமர்ந்த ஜெயலலிதா தமது நான்கு ஆண்டுகால ஆட்சியில் அனைத்து மாநிலங்களையும் விட மது விற்பனையில் முதன்மை நிலையை அடைவதில்தான் சாதிக்கமுடிந்தது. தமிழகத்தை விட மூன்று மடங்கு மக்கள் தொகை கொண்ட உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுபான விற்பனையை விட தமிழகத்தில் விற்பனை மூன்று மடங்காக எட்டியிருப்பதை சாதனை என்பதா, வேதனை என்பதா, என தெரியவில்லை இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

மதுவிலக்கு கொள்கைகாக நீண்டகாலமாக போராடி அதற்காக உயிர்நீத்த காந்தியவாதி சசிபெருமாள் தியாகம் குறித்து இதுவரை முதலமைச்சர் ஜெயலலிதா கருத்து எதுவும் கூறாதது அவரது மன நிலையை நமக்கு உணர்த்துகிறது. அதே நேரத்தில் டாஸ்மாக் கடை தாக்குதலில் பலியான ஊழியர்க்கு ரூபாய் 7 லட்சம் இழப்பீடு வழங்கியதோடு அவரது மனைவிக்கு அரசு பணியையும் வழங்கி இருக்கிறார். ஆனால் கொள்கைக்காக போராடிய காந்தியவாதியின் மறைவிற்கு இழப்பீடு மறுக்கப்படுவதின் மூலம், மதுவிலக்கு கொள்கையின் ஜெயலலிதாவிற்கு கடுகளவும் நம்பிக்கை இல்லை என்பதையே வெளிபடுத்துகிறது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மதுவிலக்கு அமல்படுத்;தப்படும் என்கிற நம்பிக்கை நமக்கு இல்லை, எனவே மதுவிலக்கு கொள்கையை வலியுறுத்த அறவழி போராட்டங்கள் நடத்த வேண்டிய கடமை காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது.

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி மாவட்ட தலைநகரங்களிலும் மற்றும் வருவாய் வட்டாரங்கள், நகர, பேரூராட்சிகளில் மக்கள் அதிகமாக கூடுகிற மைய பகுதிகளில் ஆகஸ்ட் 14 தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உண்ணாவிரத போராட்டதை மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக நடத்தப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இதில் காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், மாவட்ட, வட்டார, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், காங்கிரஸ் செயல்வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கிறார்கள். தமிழக காங்கிரஸின் மதுவிலக்கு ஆதரவு உண்ணாவிரத போரட்டத்திற்கு பெருந்திரளாக தமிழக மக்கள் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்த போரட்டத்தில் மதுவிலக்கு கொள்கைக்கு ஆதரவாக தன்னார்வ அமைப்புகள் பெருமளவில் பங்கேற்க வேண்டும். இந்த போரட்டத்தினால் பொது மக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் அமைதியான முறையில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.


Warning: Use of undefined constant rand - assumed 'rand' (this will throw an Error in a future version of PHP) in /homepages/37/d289455976/htdocs/TNCC/wordpress/wp-content/themes/wpex-pytheas/content-related-posts.php on line 24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *